திரு.பரணி கே.பாலசுப்ரமணி

செயலாளர்

 • ஒன்பதாண்டு காலம் (1985-1994) அரசு பொதுப் பணித்துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர். பின் 'பரணி பில்டர்ஸ்' எனும் நிறுவனத்தை தொடங்கி கட்டுமானப் பணிகளில் பல வெற்றிச் சிகரங்களை எட்டியுள்ளவர். தானும் ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வந்தவர் என்ற முறையில், தொடக்கப்பள்ளி மாணவர்களின் கல்விக் கனவுகள ் நனவாவதற்கு உதவி வருகிறவர்.
 • செயலாளர்திரு.பரணி கே.பாலசுப்ரமணி
  பிறந்த ஊர்நடையனூர் கிராமம்,
  வேலாயுதம் பாளையம் வட்டம்,
  கரூர் மாவட்டம்
  பிறந்த ஆண்டு 1965
  துணைவியார்திருமதி. ஜெயா
  மகன்கள்திரு. சந்தீப், திரு.பிரதீப்
  பள்ளிக்கல்விஅரசு மேல்நிலைப்பள்ளி, நடையனூர்
  பொறியியற் கல்விதமிழ்நாடு பாலிடெக்னிக், மதுரை
 • திரு.பரணி பாலசுப்ரமணி, பள்ளிப்படிப்பை நடையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பின் கட்டடக்கலைப் படிப்பை 1984-ஆம் ஆண்டில் மதுரையிலுள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியிலும் பயின்றார். அப்பொழுது இவர் சிறந்த மாணவராகவும், விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.
 • தமிழ்நாடு அரசுப்பணியில் பொறியாளராக 1985-ஆம் ஆண்டு சேர்ந்து 9 ஆண்டு காலம் பணியாற்றினார். அக்கால கட்டத்தில் தனது பணிகளில் இவர் காட்டிய திறமை, நேர்மை, கடின உழைப்பு ஆகியவற்றின் காரணமாக பொதுப்பணித்துறையின் மிகச் சிறந்த இளம் பொறியாளர்களுள் ஒருவரென இனங்கண்டறியப்பட்டு, பாராட்டுப் பெற்றவர்.
 • பொறியாளராகப் பணியாற்றிய சமயம் நொய்யல் ஆற்றுக் கால்வாய்த் திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். சென்னைக்குக் குடிநீர் வழங்குவதற்கெனத் திட்டமிடப்பட்ட தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ், பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்து புழல் ஏரி வரை கால்வாய் அமைப்புப் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஓய்வு ஒழிவின்றிப் பணி செய்தார். தனது பொறுப்பை நேர்த்தியாகவும், அரும்பாடுபட்டும் நிறைவு செய்ததன் காரணமாக அரசாங்கத்தின் பாராட்டையும், மேலதிகாரிகள் நன்மதிப்பையும் பெற்றார்.
 • காவிரி நதிநீர்ப் பிரச்சனைக்காக 1991-இல் காவிரி நடுவர் நீதிமன்றம் அமைந்தது. அதன் தலைவராக நீதியரசர் சித்தகோஸ் முகர்ஜி அவர்கள் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் நடுவர் மன்ற உறுப்பினர்கள் தமிழகம், கேரளா, கர்நாடகம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக 'பரணி' பாலசுப்ரமணி பணியாற்றினார். தமிழகத்தின் நிலைபற்றி உரிய ஆதாரங்களுடன் தேவையான விளக்கங்கள் அளித்து மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். இப்பணியைப் பாராட்டி தமிழக அரசு பொதுப்பணித் துறையின் அன்றைய தலைமைப் பொறியாளர் திரு.ஜெகதீசன் அவர்கள் பாலசுப்ரமணிக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
 • அரசுப் பணியில், ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவராக மட்டும் இருந்து விடாமல், பலருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் 1995-ஆம் ஆண்டு 'பரணி பில்டர்ஸ்' என்ற கட்டுமான நிறுவனத்தை தொடங்கினார். இலாப நோக்கத்தைப் பெரிதாகக் கருதாமல், தரத்திற்கும், தொழில்நுட்பத் திறன் வெளிப்பாட்டிற்குமே முக்கியத்துவமளித்து அழகிய வடிவமைப்பில் எழிலார்ந்த கட்டடங்களை உருவாக்கியுள்ளார். அண்ணா நகர், கீழ்பாக்கம் உட்பட சென்னையில் பல இடங்களில் வீடுகள், கடைகள், அடுக்குமாடிக் கட்டடங்கள் ஆகியவற்றைக் கட்டியுள்ளார்.
 • உலகெங்கிலும் வாழ்கின்ற கொங்கு சமுதாய மக்களின் தாயகமாக விளங்கி வரும் ஐம்பதாண்டு கால வரலாறுடைய 'சென்னை கொங்கு நண்பர்கள் சங்கம்' அமைப்பில் இணைந்து 2000 முதல் 2010-ஆம் ஆண்டுகள் வரையிலும் சங்கச் செயற்குழு உறுப்பினர், பொருளாளர், செயலாளர் ஆகிய முதன்மையான பொறுப்புகளை வகித்துத் திறம்படப் பணியாற்றியவர். இச் சங்கத்தின் மிக இளம் வயது தலைவராக 2010-ஆம் ஆண்டில் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவிக் காலத்தின் போது, அமைப்பு ரீதியான சங்கச் சேவைகளை விரிவுபடுத்தவும், மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கவும் பல சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.
 • விடுதலைப் போராட்ட வரலாற்றில், கொங்கு சமுதாயத்தின் முதற்போராளி தீரன் சின்னமலை ஆவார். இராயப்பேட்டையில் உள்ள தீரன் சின்னமலை மாளிகையும் வெள்ளி விழா மாளிகையும் இவரது முன் முயற்சியில் உருவானவை. இந்த இருபெரும் மாளிகைகளின் கட்டுமானப்பணிகளை முழுப்பொறுப்பேற்று கட்டி முடித்தார்.
 • சென்னை மவுண்ட்ரோடு, கிண்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் உருவச்சிலையைப் புனரமைத்து அன்றைய மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களைக் கொண்டு திறப்பு விழாக் கண்டவர்.
 • சுனாமியின் சீற்றத்தினால் தமிழ்நாடு தாக்கப்பட்டு பாதிப்புகளை அடைந்த போது நண்பர்களின் குழுவுடன் கடலூருக்குச் சென்று நேரடியாகப் புயல்நிவாரண உதவிகளை வழங்கி அப்பகுதி மக்களால் பாராட்டப் பெற்றவர்.
 • கிராமப்புற முன்னேற்றம், காந்தியடிகளின் கனவு, அதை நனவாக்கும் வகையில், கிராமப்புறங்களிலிருந்து கல்விபயில உதவி கோரி வரும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவம், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற படிப்புகளுக்கான முழுச்செலவினங்களையும் தானே ஏற்று உதவி செய்திருக்கிறார்.
 • தொழில் தொடர்பான நுணுக்கங்களைக் கற்றறிந்து வருவதற்காக ஜப்பான், மலேசியா, இலங்கை, சீனா, எகிப்து, வியட்நாம், கம்போடியா முதலான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியவர்.
 • மலேசிய நாட்டிலுள்ள நாமக்கல் நல அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் இவரது சிறந்த சமுதாய சேவையைப் பாராட்டி மலேசிய அமைச்சரால் 'பெருந்தலைவர்' விருது வழங்கிப் பாராட்டப்பட்டது.
 • சவீதா பல்கலைக்கழகம் இவருக்குச் 'சிறந்த தொழில் முனைவோர் விருது' வழங்கிச் சிறப்பித்துள்ளது.
 • திறமை, பணிவு, நேர்மை ஆகிய பண்புகளுடன் பணிகளில் முழு ஈடுபாடும், அர்ப்பணிப்பு உணர்வும் காட்டி அனைவரிடமும் இனிமையாகப் பழகுவதும், தேனீ போல் சுறுசுறுப்புடன் பணியாற்றுவதும் தான் இவரை 'கொங்கு நண்பர்கள் சங்க'த்தின் இளம் வயதுத் தலைவர் ஆக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.
 • 'பரணி' கே.பாலசுப்ரமணியின் மேற்கண்ட சாதனைகளைக் கருத்திற் கொண்டு, சென்னை ரோட்டரி சங்கம் இவருக்கு 'இளம் சாதனையாளர்' விருது வழங்கிக் கௌரவித்தது.
 • மேற்கண்ட அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல், திரைப்படத்துறை - தொழிற்துறை இரண்டிலும் முறையே புகழ் பெற்ற இரு சிகரங்களான திரு.சிவகுமார் - 'சக்தி மசாலா' திரு.பி.சி.துரைசாமி ஆகிய இருவரையும் இணைத்து 'சிகரம் ஐஏஎஸ் பயிற்சி மையம்' அமைப்பை இப்போது தொடங்கவிருக்கிறார் திரு.'பரணி' பாலசுப்ரமணி.