டாக்டர்.பி.சி.துரைசாமி

பொருளாளர்

 • 'சக்தி மசாலா' நிர்வாக இயக்குநர் டாக்டர்.பி.சி.துரைசாமி. உணவுப் பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் 38 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சக்திமசாலா குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர். சக்திதேவி அறக்கட்டளையின் நிறுவனர், மேலாண்மை அறங்காவலர். தொழிலில் வெற்றி பெற்றதோடு, மாற்றுத் திறனாளிகட்கு வேலை வாய்ப்புகள் வழங்குதல், கிராமப்புறப் பள்ளிகளைத் தத்தெடுத்து கணினிகள், உட்புறக் கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பல சமூகப் பணிகளையும் செய்து வருகிறவர்.
 • பொருளாளர்டாக்டர்.பி.சி.துரைசாமி
  நிறுவனர்:சக்தி மசாலா நிறுவனங்கள்
  சக்திதேவி அறக்கட்டளை
  பிறந்த ஊர்திருவேங்கடம்பாளையம், பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்
  பிறந்த தேதி15.11.1951
  கல்வித் தகுதி BA.,
  துணைவியார்திருமதி.D.சாந்தி
  மகள் திருமதி.D.சக்திதேவி
  மகன் திரு. D. செந்தில் குமார்
 • சக்தி மசாலா குழுமங்களின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர். உணவுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைத் தொழிலில் 38 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபட்டிருப்பவர். நறுமணப் பொருட்கள், மசாலா மற்றும் கறிப்பொடிகள். ஊறுகாய்கள், சூரியகாந்தி எண்ணெய், அப்பளம், நெய் மற்றும் பிற உணவுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் உலகளவில் முன்னணி நிறுவனமாக சக்தி மசாலா நிறுவனம் இருந்து வருகிறது. சக்தி மசாலா நிறுவனத்தில் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக பெண்கள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
 • சக்திதேவி அறக்கட்டளையின் (சக்தி மசாலா நிறுவனங்களின் ஓர் அங்கம்) நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலர். அறக்கட்டளையின் மூலம் சமுதாய நலனுக்காக சக்தி மருத்துவமனை, சக்தி மறுவாழ்வு மையம், சக்தி சிறப்புப்பள்ளி ஆகியவற்றின் மூலம் தகுதி பெற்ற மருத்துவர்கள், தெரபிஸ்ட் மற்றும் சிறப்பு ஆசிரியர்களைப் பணியமர்த்தி பொது மக்கள் நலன் கருதி இலவசமாக சேவை வழங்கப்பட்டு வருகிறது.
 • அறக்கட்டளை மூலம் நாட்டு நலன் மற்றும் சமுதாய நலனுக்காக சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த தளிர் திட்டத்தின் மூலம் மரம் நடுதல், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் மேம்பாட்டிற்காக பள்ளிகளைத் தத்தெடுத்து நூலகங்கள் நிறுவி நடத்துதல், ஆண்டுதோறும் மாணவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் அளித்தல், கல்வி ஊக்கத்தொகை மற்றும் உயர்கல்வி பெற நிதிஉதவி அளித்தல், பள்ளிகளில் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தல், இதர சமூக சேவை நிறுவனங்கள், அரசு திட்டங்கள் ஆகியவற்றிற்கு நிதி உதவியளித்து சேவைத் திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற பல்வேறு சமுதாய பணிகள் சக்தி மசாலா நிறுவனத்தின் மூலம் பொது மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தப்படுகின்றன.
 • வகித்துள்ள பொறுப்புகள்

 • ஈரோடு மாவட்ட மஞ்சள் உற்பத்தியாளர்கள் அமைப்பின், தமிழ் மாநிலக் கிளையினுடைய துணைத் தலைவர், ஈரோடு மாவட்ட விற்பனை வரி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர். இம் மாவட்ட ஒழுங்கு முறை விற்பனைக் குழுமத்தின் ஆளுகைக் குழு உறுப்பினர்.
 • ஈரோடு மாவட்ட மஞ்சள் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர், சென்னை, தெற்கு மண்டல வேளாண் உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர், மும்பையிலுள்ள நியாயமான வணிக நடைமுறைகள் குழுவின் வாழ்நாள் உறுப்பினர். ஈரோடு மத்திய நகர அரிமா சங்க அறக்கட்டளையின் தலைவராக 2005 முதல் இன்று வரை பதவி வகிக்கிறார். இவ்வறக்கட்டளையின் சார்பில் ஈரோட்டில் மூத்த குடிமக்களுக்கான ஒர் இல்லம் நடத்தப்படுகிறது, இங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியொன்றை நடத்தும் ஈரோடு ஜுனியர் சேம்பர் அறக்கட்டளையின் துணைத்தலைவர்.
 • மதுரையிலுள்ள தமிழ்நாடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் தொழிற்துறை அமைப்பின் செயற்குழு உறுப்பினர், உயிரி மருத்துவக் கழிவுப் பொருட்கள் மேலாண்மைக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர், ஈரோடு மாவட்ட அரசு மருத்துவ மனைகளுக்கான அதிகாரம் வழங்கப்பட்ட குழு உறுப்பினர். இவரது பணிகளைப் பாராட்டி தனிப்பட்ட முறையிலும், சக்தி டிரேடிங் கம்பெனி, சக்தி மசாலா (பி) லிமிடெட் – நிறுவனங்கள் சார்ந்தும் ஏராளமான விருதுகளையும், பரிசுகளையும் பல்வேறு அரசு, தனியார் அமைப்புகள் வழங்கியுள்ளன.
 • ஈரோடு ஜுனியர் சேம்பரிடமிருந்து கிளை அளவிலும், இந்திய ஜுனியர் சேம்பரிடமிருந்து மண்டல அளவிலும் கமல் பத்ர விருதைப் பெற்றவர். ஈரோடு ரோட்டரி சங்கம், லயன்ஸ் க்ளப்ஸ் இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் அமைப்புகளின் கவுரவ விருது, மெல்வின் ஜோன்ஸ் ஃபெல்லோ விருதையும் அர்ப்பணிப்புணர்வுடன் மனித நேய சேவைகள் ஆற்றியமைக்காகப் பெற்றுள்ளார்.
 • 1987-2001 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில், 12 ஆண்டுகள் மிகச்சிறந்த தொழில்முனைவோர் விருது, மிக அதிகபட்ச எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிய ஆகச்சிறந்த பணியமர்த்துநர் விருது - எனப் பெற்ற விருதுகள் பல.
 • ஆகச்சிறந்த சிறுதொழில் முனைவோர் (1992) ஆகச்சிறந்த நடுத்தரத் தொழில் முனைவோர் (2001) ஆகிய சாதனைகளுக்காக தேசிய அளவில் மும்பையில் உள்ள நியாயமான வணிக நடைமுறைகள் குழுவினால் நிறுவப்பட்ட ஜம்னாலால் பஜாஜ் விருதுகளை சக்தி டிரேங் கம்பெனிக்காகப் பெற்றவர்,
 • 2002ஆம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை சக்தி மசாலா (பி) லிமிடெட் பெற்ற விருதுகள் 17 ஆகும். புதுடெல்லியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை முன்னெடுக்கும் தேசிய மையம், தமிழ்நாடு அரசு, இன்ஸ்டிட்யூட் ஆஃப் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், இந்திய அரசு, லயோலா வணிக நிர்வாக நிலையம், இந்தியத் தர நிர்ணயக் கழகம், ஆற்றல் மற்றும் மூல வளங்கள் நிலையம், நுண் - சிறு - நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், ஊரக வளர்ச்சி மேம்பாடு, பஞ்சாயத்து அமைச்சகம், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் கோவை வேளாண் பல்கலைக்கழகம் – உள்ளிட்ட அரசு, தனியார் அமைப்புகளால் இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, சவீதா பல்கலைக்கழகம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது.
 • சத்யபாமா பல்கலைக்கழகம் P.C. துரைசாமி அவர்களுக்கு 27.04.2015 அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. பெருந்துறை அமைதிப் பூங்கா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் காப்பாளர்.